தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும்- எல்.முருகன்

Sinekadhara

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 

தமிழக பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கி திருச்செந்தூர் வரை செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கடவுள் முருகனின் துணைகொண்டு வேல் யாத்திரையை தொடங்குவதாக கூறினார்.

மேலும் கையில் வேலுடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஏராளமானத் தொண்டர்களுடன் திருத்தணிக்கு அவர் புறப்பட்டார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட வேல் யாத்திரை தற்போது நசரத் பேட்டையைச் சென்றடைந்துள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் தொடரும் என அறிவித்துள்ளார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாத்திரையை நிறுத்த முற்பட்ட காவல்துறையினரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்து வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் உடன் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.