தமிழ்நாடு

“தணிக்கை குழுவை கலைத்துவிடலாம்?” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து

“தணிக்கை குழுவை கலைத்துவிடலாம்?” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து

webteam

‘சர்கார்’ திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்குவதுடன் பிரச்னைகள் தீர்ந்துவிடவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீ‌பாவளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க திரையரங்கில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்க வேண்டுமென்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் ‘சர்கார்’ திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று பிற்பகல் நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில் ‘சர்கார்’ மறுதணிக்கை விவகாரம் பற்றி குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

அதில் அவர், குண்டர் கலாச்சாரம் மேலும் பரவ வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டில் தணிக்கை குழுவை கலைத்துவிடலாம் என்றும், எதைத் திரையிடலாம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள், சாதி வெறியர்கள் மற்றும் கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் முடிவு செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த வசனங்களை நீக்கவேண்டும், எதை திரையிடலாம் என்பதையும் அவர்களே முடிவு செய்யட்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.