செய்தியாளர்: அருளானந்தம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. குறிஞ்சி மலர்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும், 14க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில், ஒரு வகையாக சிறு குறிஞ்சி மலர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் பூத்துக் குலுங்கி வருகிறது. மனம் கவரும் நீல வண்ணத்தில் பூக்கும், இந்த சிறு குறிஞ்சி மலர்கள், கடல் மட்டத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்திற்குள் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் வளரும் தன்மை உள்ளது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குவதாகவும், தெரியவருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, இதே பூக்கள் மலையடிவாரப் பகுதிகளில் பூத்துக் குலுங்கி நிலையில், மீண்டும் 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் கண்கவர் சிறு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக மலை அடிவார சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.