தமிழ்நாடு

குரங்கணி காட்டுத்தீ: விசாரணை அதிகாரி ஆய்வு

webteam

காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா ஆய்வை தொடங்கினார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் கடந்த 10ஆம் தேதி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக, 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு சென்றவர்கள் இரவில் அங்கு தள்ளியுள்ளனர். மார்ச் 11ஆம் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினர். அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில் 10 பேர் காயங்கள் இன்றி தப்பிய நிலையில் நிகழ்விடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  8 பேர் உயிரிழந்தனர்.  இதனையடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை, ஈரோடு, கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை நடத்துவார் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி நடந்ததாக கூறப்படுவது உள்ளிட்டவை குறித்து அதுல்ய மிஸ்ரா விசாரிப்பார் என்றும் 2 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா தனது ஆய்வை தொடங்கியுள்ளார்.வருவாய், தீயணைப்பு, காவல், வனத்துறையினர் ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.