தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்து பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

webteam

 குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் கடந்த 10ஆம் தேதி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு சென்றவர்கள் இரவில் அங்கு தள்ளியுள்ளனர். மார்ச் 11ஆம் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினர். அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில் 10 பேர் காயங்கள் இன்றி தப்பிய நிலையில் நிகழ்விடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை, ஈரோடு, கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.