தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

webteam

குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மார்ச் 11 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில், தமிழக அரசு பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து தனது அறிக்கையை அதுல்ய மிஸ்ரா சமர்ப்பித்தார். 

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மலையேற்ற சுற்றுலாவைச் ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களால் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களும் அறிக்கையில் உள்ளன. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.