பாஜகவின் மூத்த நிர்வாகியான து. குப்புராமு தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின் கடந்த 4 மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தலைவர் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலையும் பாஜக சந்தித்தது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜகவின் மூத்த நிர்வாகியான து. குப்புராமுவை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராமு பாஜக துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். 1986 முதல் 2006ம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர் குப்புராமு. 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் து. குப்புராமு.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.