தமிழ்நாடு

சிவகங்கை: யானையை வைத்து மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற குன்றக்குடி அரசு தொடக்கப் பள்ளி

சிவகங்கை: யானையை வைத்து மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற குன்றக்குடி அரசு தொடக்கப் பள்ளி

webteam

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களை மகிழ்விக்க யானையை வைத்து வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது சிவகங்கையை சேர்ந்த ஓர் பள்ளி நிர்வாகம்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், தேவக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 864 துவக்க பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். இதில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அரசு துவக்க பள்ளி, தங்கள் மாணவர்களை வரவேற்கு குன்றக்குடி முருகன் கோவில் யானை சுப்புலட்சுமியை அழைத்து வந்து அதன் தும்பிக்கை மூலம் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க வைத்துள்ளனர்.

யானையுடன் இணைந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். மேலும் உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒரு பள்ளி மட்டுமன்றி தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பங்கேற்று மாணவர்களை வரவேற்க உள்ளனர்.

பள்ளியின் முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உடன் கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், வண்ணம் தீட்டுதல், அனுபவ பகிர்வு, கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பின்னர், 40 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்கூட, மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல என்றும் ஆன்லைன் மூலமாகவும் வகுப்பு நடைபெறும் என்றும் அரசு அறிவித்துள்ளது.