தமிழ்நாடு

கணினிகள் பழுதால் (ஏ)மாற்றமடைந்த ஏலக்காய் ஏலம்..

webteam

கேரளாவில் நறுமணப்பொருட்கள் வாரியத்தின் கணினிகள் பழுதால் ஏலக்காய் ஏலம் தேனிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் குமுளி அருகே உள்ள புற்றடியில் இந்திய நறுமணப்பொருட்கள் வாரிய பூங்கா உள்ளது. இங்குள்ள ஏலக்காய் ஏல மையத்தில் வாரத்தின் மூன்று நாட்கள் ஏலம் நடைபெறும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், இந்த மையம் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு ஒவ்வொரு வியாபாரிக்கும் தனித்தனி கணினிகள் வழங்கப்பட்டன. ஏலக்காய் மாதிரிகள் கிடைத்தவுடன் தாங்கள் விரும்பும் விலையை வியாபாரிகள் கணினியில் பதிவு செய்வதும், விலை நிர்ணயம் செய்வதுமாய் ஏலம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஏல மையத்தில் உள்ள கணினிகள் பழுதாகியுள்ளதாக வியாபாரிகள் புகார் கூறியுள்ளனர். அத்துடன் விலை நிர்ணயம் உள்ளிட்டவற்றில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பழைய முறையிலேயே மைய பணியாட்கள் மூலம் ஏலக்காய் ஏலம் விடப்பட்டது. இந்தச் சூழலில் கணினிகள் பழுது பார்க்கப்படும் வரை, ஏலத்தை தேனி மாவட்டம் போடியில் உள்ள ஏலக்காய் மையத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏலக்காய் வியாபாரிகளும், விவசாயிகளும் இதை ஏற்றுக்கொண்டதாகவும் ஏல மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.