கோவையில் காட்டு யானைகளை விரட்டி பல உயிர்களைக் காப்பாற்றிய கும்கி யானைகள் முதுமலையில் உள்ள முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் அவ்வப்போது ஊருக்குள் வரும் காட்டு யானைகளை, கும்கி யானைகளை கொண்டே வனத்துறையினர் கட்டுக்குள் விரட்டி வந்தனர். இதில் சாடிவயல் முகாமில் இருந்த பாரி மற்றும் சுஜய் என்ற இரு யானைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த இரு யானைகளும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாடிவயல் முகாமில் இணை பிரியாத நண்பர்களாக வலம் வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு கும்கி யானைகளையும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள முகாமிற்கு மாற்றம் செய்ய உள்ளனர். இதுபோன்ற கும்கி யானைகளை வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்வது சாதாரண நிகழ்வுதான் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றுக்கு பதிலாக வேறு இரு கும்கி யானைகள் இங்கு வரவுள்ளதாக கூறி உள்ளனர். பல மனித உயிர்களை காப்பாற்றிய பெருமை இந்தக் கும்கி யானைகளுக்கு உள்ளதால் கோவை மக்களுக்கு இந்தக் கும்கி யானைகள் வேறு இடத்திற்கு செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.