தமிழ்நாடு

விவசாயி பலி எதிரொலி: தாளவாடியில் கும்கிகளாக களமிறங்கும் சின்னதம்பி, ராஜவர்தன்!

நிவேதா ஜெகராஜா

தாளவாடி அருகே நேற்றைய தினம் யானை தாக்கியதில் விவசாயி மல்லநாயக்கர் என்பவர் உயிரிழந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆனைமலையில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தர்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லநாயக்கர் (வயது 68) ஒற்றை யானை தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திகினாரையில் விவசாயியை இந்த யானை தாக்கி கொன்ற நிலையில் புதன்கிழமை மீண்டும் தர்மாபுரத்தில் விவசாயி மல்லநாயக்கரை தாக்கி கொன்றுள்ளனர். கடந்த இரு மாதத்தில் ஒற்றையானையால் இருவர் கொல்லப்பட்டதால் ஆட்கொல்லி யானை பிடித்து வேறு இடத்திற்குகொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி கொங்ஹள்ளி சாலையில் அப்பகுதி விவசாயிகள் சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

1 மணி நேரம் நடந்த போராட்டத்தின்போது அங்கு சென்ற மாவட்ட வனஅலுவலர் தேவேந்திர குமார் மீனா, வனச்சரக அலுவலர் சதீஸ் மற்றும் தாளவாடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதன்படி `ஆனைமனையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வனத்தில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் வரும் பாதையில் கும்கி யானை நிறுத்தப்பட்டுள்ளது. கும்கி யானையின் வாசத்தை நுகரும்போது ஒற்றை யானை ஊருக்குள் புகாது. இன்று மாலை மற்றொரு ராஜவர்தன் யானையும் வந்துவிடும்.

முதலில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக கும்கி யானைகள் செயல்படும். ஒற்றை யானை ஊருக்குள் புகாதபடி 4 கிமீ தூரம் அகழியை மேம்படுத்தும்பணி துவங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு கும்கிகளுடன் ஒற்றையானை விரட்டும் பணி துவக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- செய்தியாளர்: டி.சாம்ராஜ்