தமிழ்நாடு

உலகிலேயே உயரமான நடராஜர் சிலை! கும்பகோணம் சிற்பியை கௌரவிக்க திருவாவடுதுறை ஆதினம் கோரிக்கை

webteam

உலகிலேயே உயரமான நடராஜர் சிலையை வடிவமைத்து சாதனை புரிந்த கும்பகோணம் அருகே திம்மக்குடியை சேர்ந்த சிற்பி வரதராஜனுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோழர் கால பாணியில் 23 அடி உயரத்திலும், 17 அடி அகலத்திலும், 15 டன் எடையில் உலகில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள சிற்பி வரதராஜன் வடிவமைத்துள்ளார். இந்த சிலையினை காண நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு செல்கின்றனர். இந்த சிலையினை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், “உலகில் மிக உயரமான - ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்டமான நடராஜர் சிலையை வடிவமைத்த சிற்பி வரதராஜனுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்த சிலை வரும் 6ம் தேதி (வியாழக்கிழமை) கும்பகோனத்திலிருந்து வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.