Yesudas
Yesudas pt desk
தமிழ்நாடு

கும்பகோணம்: மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் - சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் பறிபோன உயிர்!

webteam

கும்பகோணத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கோசலைகளில் அடைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 7 ஆம் தேதி புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற ஏசுதாஸ் என்பவர் சாலை நடுவே படுத்துக் கிடந்த மாட்டின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cows on road

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமக குளம், பாலக்கரை, நீதிமன்ற சாலை, புதிய பேருந்து நிலையம் என மாநகரப் பகுதிகள் முழுவதும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவை, சாலைகளின் நடுவே படுத்துக் கொண்டும், ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டும் இருப்பதால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழல் தொடர்ந்து வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கோசலைகளில் அடைக்கவும், சாலைகளில் மாட்டை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 7 ஆம் தேதி புதிய தலைமுறை எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த திமுக மத்திய ஒன்றிய துணை தலைவராக இருந்த ஏசுதாஸ் என்பவர், நேற்று நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அவசரமாக சென்றுள்ளார்.

cows

அப்போது சத்திரம் கருப்பூர் அருகே சென்றபோது சாலையின் நடுவே படுத்துக் கிடந்த மாட்டின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த அவரை அந்த வழியாக வந்த சிலர் மீட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது அந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தற்போது ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.