கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் நிறுவனர் பழனிசாமி, தாளாளரான பழனிசாமியின் மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர். அதில் ஒருவர் அப்ரூவராக மாறினார். 2 பேர் விசாரணையின்போது உயிரிழந்தனர்.
கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு, 2006 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 488 பேரை சாட்சிகளாக சேர்த்த காவல்துறை, 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தீ விபத்து நடைபெற்று 8 ஆண்டுகளுக்கு பிறகே, அதாவது 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே வழக்கின் விசாரணை தொடங்கியது. அதில் 230 பேர் சாட்சியளித்தனர். 22 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த விசாரணையில், 2014 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குழந்தைக்கு 10 ஆண்டுகள் வீதம் 94 குழந்தைகளுக்கு 940 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ரூ.51,65,700 அபராதமும் விதிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் வசந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கப்பட்டது.
பள்ளியின் பொறியாளர் ஜெயசந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,57,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 11 பேரை நீதிமன்றம் விடுவித்தது. தண்டனை வழங்கப்பட்ட 10 பேரும், 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று அறிவிக்கப்பட்டது.