கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 4 பேர் எடுத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த உத்ராபதி என்பவர் அப்பகுதியில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், உத்ராபதி, கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வட்டிக்கு 50 ஆயிரம் பணம் வாங்கி அதனை ஸ்கூட்டியின் இருக்கையின் கீழ் வைத்துள்ளார்.
கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள டயர் கடையின் முன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு எதிரில் உள்ள கடையில் டீ அருந்த சென்ற நேரத்தில் நோட்டமிட்ட நான்கு பேர் அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பணத்தை பறிகொடுத்த உத்ராபதி கூறியுள்ளார். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.