கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கோயிலுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காரில் வந்த சிலர் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியை கோயில் வாசலில் இறக்கி விட்டு விட்டு, பிறகு வந்து அழைத்துச் செல்கிறோம் எனக்கூறி சென்றுவிட்டனர்
கடந்த மூன்று தினங்களாக மூதாட்டி உண்ண உணவு இல்லாமல் படுக்க இடமில்லாமல் மிகவும் வேதனையோடு அழுது கொண்டு இருந்ததை கண்ட கோயிலின் அருகாமையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மூதாட்டிக்கு மூன்று வேளையும் உணவு கொடுத்து ஒரு நாள் மட்டும் இரவு கோயிலில் தங்க வைத்தனர்.
பின்னர், கோயில் நிர்வாகம் இரவில் தங்குவதற்கு அனுமதி மறுக்கவே அருகாமையில் உள்ள இடங்களில் தங்க வைத்து உணவு அளித்து வந்தனர். அந்த மூதாட்டியிடம் தங்கள் பெயர்? என்ன எந்த ஊர்? என்று கேட்டதற்கு அவர்கள் தெலுங்கில் பேசுகிறார்களே தவிர தமிழில் பேச தெரியவில்லை.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஆட்டோ ஓட்டுனர்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் சங்கரனை அழைத்து மூதாட்டியின் நிலைமையை கூறி ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து மூதாட்டியை ஆட்டோவை ஏற்றிச் சென்று அருகாமையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
பின்னர், ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்ததில்... அந்த மூதாட்டியின் பெயர் சித்ரா என்றும், மாமியார் திட்டியதால் கோபமடைந்த மருமகள் காரில் அழைத்து வந்து மூதாட்டியை கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோயிலில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது