மீன்பிடித்து விட்டு துறைமுகத்துக்குள் நுழையும்போது கட்டுப்பாட்டை இழந்து நாட்டு படகு கவிழ்ந்த நிலையில், படகில் இருந்த மூன்று மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க பூந்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஷிபு (39) தனது பைபர் படகில் சக இரு மீனவர்களுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த மீனவர்கள் நேற்று மீன்பிடி தொழில் செய்துவிட்டு தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் வந்து துறைமுகத்தில் நுழைந்தனர்.
அப்போது வேகமாக வந்த படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த ஷிபு உட்பட மூன்று மீனவர்களுக்கும் பாதிப்பின்றி உயிர்தப்பினர். இந்த நிலையில் சக மீனவர்கள் கவிழ்ந்த படகை மீட்டு துறைமுகத்தில் கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து நடந்த காட்சியை துறைமுகத்தில் நின்ற ஒரு நபர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதில் தற்போது வேகமாக பரவி வருகிறது.