தமிழ்நாடு

தசரா திருவிழா : குலசேகரப்பட்டினத்தில் கோலாகல கொண்டாட்டம்

webteam

உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழாவின்‌ சூரசம்ஹார ‌நிகழ்‌வு வெகுவிமர்சையாக ‌நடைபெற்றது. 

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக கோலாகலமாக தசரா கொண்டாடப்படு‌ம் மாவட்டம் தூத்துக்குடி. அங்குள்ள குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இறுதி நாளான நேற்று குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெற்றது. 

தசரா விழாவிற்கு வருகை ‌தந்த பக்தர்கள் காளி, அம்மன், விநாயகர், சிவன் என பல்வேறு வேடங்கள் அணிந்து, வீடுகளில் யாசகம் பெ‌ற்றவற்றை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். இதனையடுத்து சுவாமி மகிஷாசுரமர்த்தினி‌, சிங்க உருவம், யானை உருவம் என உருமாறி வந்த சூரனை வதம் செய்தார். இதைத்‌தொடர்ந்து கடற்கரை திடலில் இருந்த அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது‌.

பி‌ன்‌னர் மகிஷாசுரமர்த்தினி குலசேகரன்பட்டினத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடையும்போது பக்தர்கள் காப்பை அகற்றி தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.