தமிழ்நாடு

“ரபேல் போர் விமான கொள்முதலில் இடைத்தரகருக்கு ரூ.8.62 கோடி கமிஷன்” - கே.எஸ்.அழகிரி

JustinDurai
'இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்த தசால்ட் நிறுவனத்தை தடை செய்வதோடு, அந்த நிறுவனத்தின் மீது ஃஎப்.ஐ.ஆர். பதிவு செய்து, வழக்கை தொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''இந்தியாவில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் விளங்கியதுதான் மோடி ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மொத்தம் 126 விமானங்கள் வாங்கவும், ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, 10 ஏப்ரல் 2015 இல் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது, பாதுகாப்புத்துறையின் கொள்முதல் நடைமுறைகளை புறக்கணித்துவிட்டு, 126 விமானங்கள் வாங்குவதற்கு பதிலாக, 36 விமானங்கள் வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியிலிருந்து ரூ.1670 கோடியாக, மூன்று மடங்கு கூடுதலாக வாங்குவதற்கு 23 செப்டம்பர் 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், மொத்த கொள்முதல் விலை ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அரசுக்கு ரூ.41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இத்தகைய பின்னணியில், பா.ஜ.க. ஆட்சியில் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது, பா.ஜ.க. ஆட்சியில் வாங்கப்பட்ட ரபேல் போர் விமான கொள்முதலில் இடைத்தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கப்பட்டதாக, பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த தொகையை ரபேல் போர் விமான தயாரிப்பு நிறுவனமான தசால்ட் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த நாட்டின் ஊடகங்களில் செய்தியாக பரபரப்புடன் வெளியாகி இருக்கிறது. இந்த கொள்முதல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கடந்த காலங்களில் கூறிய குற்றச்சாட்டு இன்றைக்கு உறுதியாகி இருக்கிறது.
ஏற்கனவே ரபேல் போர் விமான கொள்முதல் குறித்து எழுப்பட்ட குற்றச்சாட்டிற்கு இன்றைக்கு ஆதாரம் வெளியாகி இருக்கிறது. இடைத் தரகருக்கு லஞ்சமாக பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து, பாரபட்சமற்ற சுயேட்சையான விசாரனை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், இது பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்டது என்பதால் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை கொள்முதலில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுத்த தசால்ட் நிறுவனத்தை தடை செய்வதோடு, அந்த நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, வழக்கை தொடுக்க வேண்டும். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தசால்ட் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோர வேண்டும்.
எனவே, பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் எதற்கும் பதில் கூறாமல் இருப்பதைப் போல, இதையும் தட்டிக் கழிக்காமல் அவர் சம்மந்தப்பட்டிருப்பதால் இதற்கு பதில் கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.''
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.