தங்களுக்கு உதவி செய்தவர்கள் மீது கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறு பரப்பி வருகிறார் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மணிரத்தினம், “எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பதை கிருஷ்ணசாமி நேரில் பார்த்தது கிடையாது. உண்மை நிலவரம் என்ன வென்று தெரியாமல் பேசக்கூடாது. அனிதா ரூ. 1 லட்சம் செலவு செய்து படித்ததாக, உண்மையான நிலவரம் தெரியாமல் கிருஷ்ணசாமி தன்னிச்சையாக பேசி வருகிறார்” என்று கூறினார்.
மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதோடு, அனிதா மரணம் தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் செய்துள்ளார்.