செய்தியாளர்: K.அரிபுத்திரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெ.எட்டுப்பட்டி மோட்டூரைச் சேர்ந்தவர்கள் ராமசாமி -கௌரம்மாள் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். இவர்களில் இளைய மகளான சங்கவி (12) சாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி காலை வெந்நீர் வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே இருந்த அடுப்பில் விறகுகளை வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். அப்பொழுது திடீரென சங்கவியின் ஆடைகள் தீப்பற்றியுள்ளது. இதையடுத்து சங்கவியை மீட்ட உறவினர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மூன்றரை லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சற்று உடல் நலம் தேறியநிலையில், மருத்துவரின் ஆலோசனைபடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று சிறுமி, வயிற்று வலி என்று கூறியதால் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து சிறுமியின் சடலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக எடுத்து வரப்பட்டது. இது குறித்து சாம்பல்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.