கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள் அச்சம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து 80 கிலோ மீட்டர் மலைப் பயணத்திற்குப் பிறகு மஞ்சுகொண்டபள்ளி பஞ்சாயத்தை அடையலாம். இங்குள்ள பேல்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்க வரும் லட்சுமி, இந்த மலைக்கு அப்பால் உள்ள நந்திபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தினந்தோறும் யானைகள் உலவும் பாதைகளை கடந்து பள்ளிக்குச் செல்கிறார். யானைகள் நடமாட்டம் மிகுந்த பாதையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல 3 யானைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனது பயணம் தொடர்பாக மழலைக் குரல் மாறாமல் கூறும் லட்சுமி, தான் செல்லும் பாதையில் சில நேரங்களில் யானைகள் வரும் என அச்சத்துடன் கூறுகிறார். அத்துடன் சில நேரங்களில் யானைகள் வரும்போது, வீடு வரை ஓடிச்செல்ல நேரிடும் என்கிறார். அவ்வாறு ஓடுவதால் கால் வலி ஏற்பட்டு, பின்னர் அதற்கு சுடு தண்ணீரால் வைத்தியம் பார்க்க வேண்டும் எனவும் அழகாகச் சொல்கிறார். அவரது பேச்சு மழலைத் தன்மையுடன் இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தும் புரிகிறது.
யானை பாதுகாவலர்களில் ஒருவரான மாதம்மாள் கூறும்போது, “நகரங்களில் வாழும் குழந்தைகள் அன்றாட பள்ளி வாழ்க்கையிலிருந்து விடுபெற உயிரியல் பூங்காவிற்குச் சென்று விலங்குகளைக் காண்பதுண்டு. ஆனால், இந்த மலைக் கிராமக் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு நாள் பள்ளிப் பயணமே விலங்குகளுக்கு இடையேதான்” என்று தெரிவிக்கிறார்.