தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிப்பு: நடவடிக்கை எடுக்க கிராமமக்கள் கோரிக்கை

kaleelrahman

கிருஷ்ணகிரி அருகே பெரியார் அம்பேத்கர் படங்கள் மீது சாணி வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் அம்பேத்கர் காலனியில் உள்ள மின்மோட்டார் அறையின் சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் மற்றும் பெரியார் பிறந்த நாளன்று இந்த இடத்தில்தான் விழா கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் நாளை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் அப்பகுதி காலனி மக்கள் செய்து வந்தனர். அதற்காக பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் மீது சாணியை கரைத்து ஊற்றியுள்ளார்.

காலையில் வழக்கம்போல இவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த அம்பேத்கர் காலனி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பேத்கர் காலனியில் இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னையின் காரணமாக ஒரு தரப்பினர் படங்களுக்கு வர்ணம் பூசியதும் மற்றொரு தரப்பினர் நள்ளிரவில் படங்களின் மேல் சாணி கரைசல் ஊற்றி உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.