தமிழ்நாடு

கேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்

கேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்

webteam

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் பழுதடைந்த மதகு கடந்த 5 நாட்களாக சரிசெய்யப்படாத நிலையில், ஆறாவது நாளில் மதகை சரிசெய்யும் பணிகள் தொடங்கின.

கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தருமபுரி திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக பாய்ந்து கடலில் இணைகிறது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் கே.ஆர்.பி.அணையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணையும் கட்டப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரிடையாக பலன் பெறுகின்றன. 

இவற்றில் 52 அடி கொள்ளளவு கொண்ட கேஆர்பி அணை, கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. உடைந்த மதகு உட்பட 8 மதகுகளும் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யபட்டன. இருப்பினும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெய்த தொடர் மழையால் கடந்த 3 மாதங்களாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் பிரதானமான 8 மதகுகளில் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 52 அடியில் இருந்து 32 அடியாக அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக பணிகள் நடைபெறாத நிலையில், மதகு உடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மதகின் உயரத்தை குறைப்பதன் மூலம் அணையின் உயரத்தை குறைப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.