தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகள் : நோயாளிகள் அதிர்ச்சி 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகள் : நோயாளிகள் அதிர்ச்சி 

webteam

ஓசூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த காமன் தொட்டி என்னும் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புக்கசாகரம், கோனேரிப்பள்ளி, பேரண்டப்பள்ளி உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், சுண்டகிட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வந்துள்ளார். அதனால் அவர் சிகிச்சைக்காக காமன்தொட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து மாத்திரை எழுதி கொடுத்துள்ளனர். அதைப்பெற்ற பிரகாஷ் அங்குள்ள மாத்திரை கவுண்டரில் மாத்திரை வாங்கியுள்ளார். 

அதை பார்த்தபோது அது காலாவதியான மாத்திரை என தெரியவந்தது. அந்த மாத்திரை சீட்டில் அக்டோபர் மாதம் காலாவதியான தேதி குறிப்பிட்டு இருந்தது, இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கடந்த 15 நாட்களாக நோயாளிகளுக்கு மருத்துவர் ஊசிபோடாமல் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களை செவிலியர்கள் எரிச்சலுடன் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் துணை இயக்குநர் பிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுகுறித்து புகார் ஏதும் வரவில்லை எனவும் இருப்பினும் மருத்துவ குழுவை அனுப்பி உரிய விசாரணை மேற்கொண்டு, தவறுகள் நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.