கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். மாணவி பள்ளிக்கு வராததை அறிந்த அதே பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரிடம் தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டதில், அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் சின்னசாமி 57, ஆறுமுகம் 47, பிரகாஷ் 37, ஆகியோர் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு தலைமையாசிரியர் அதிர்ச்சிக்குள்ளாகினார். உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலருக்கும், குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனைவியின் புகாரின் பேரில் ஆசிரியர்கள் சின்னசாமி ஆறுமுகம் பிரகாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி கருவுற்று கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களும் தற்காலிக பணிகளை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உறவினர்கள் இன்று அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை நம்பி பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறோம், ஆனால் அவர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் சந்தூர் கிராமத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களை எங்கள் முன்பு ஆஜர் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சு வர்த்தையில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கடந்தாண்டு பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற இரண்டு மாணவிகள் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தை மறைத்ததாக அவருக்கு உதவியதாக என்சிசி பயிற்சியாளர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்தார். அந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களால் எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.