தமிழ்நாடு

உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.. பணிகள் தற்காலிக நிறுத்தம்..!

உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.. பணிகள் தற்காலிக நிறுத்தம்..!

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஓசூரை அடுத்த சொக்கநாதபுரம், கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிறுகானப்பள்ளி வழியாக, உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சேவகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும், 16 விவசாயிகளுக்கு மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க, பொக்லைன் வாகனத்துடன் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். இதையறிந்த விவசாயிகள், சேவகானப்பள்ளி அருகே திரண்டனர். இதையடுத்து அங்கு ஓசூர் ‌வட்டாட்சியர் செந்தில்குமரன், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், முருகன், சத்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய எம்எல்ஏ பிரகாஷ், விவசாய நிலம் அல்லாத மாற்று வழியில் மின்கோபுரத்தை கொண்டு செல்ல வேண்டும் எ‌ன்று கேட்டுக்கொண்டார். 

ஆட்சியர் ஆய்வு செய்து மாற்று இடம் தேர்வு செய்யும் வரை பணிகளை துவங்கக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.