கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான தம்பி, அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாலத்தோட்ட பள்ளி சேர்ந்தவர் சித்தப்பா. இவருக்கு மாதேஷ் மற்றும் கிருஷ்ணன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 25 வயதாகும் மாதேஷ் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் அவரது தம்பி கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேஷூக்கும் கிருஷ்ணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் நண்பர்களுடன் குடிப்பதற்காக கிருஷ்ணன் பணம் கேட்டு உள்ளார். அதற்கு அண்ணன் மாதேஷ் ‘வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றுகின்ற உனக்கு நான் எப்படி பணம் கொடுப்பேன்’ எனத் திட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அருகே இருந்த கட்டையை எடுத்து அண்ணன் மாதேஷின் தலையில் தாக்கியுள்ளார். அதில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருகே இருந்த வீட்டுக் கத்தியை எடுத்து மாதேஷை சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே ஓடிவந்து அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தளி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்று தம்பி கிருஷ்ணனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். அண்ணன் மாதேஷ் உடல், உடல்கூறு ஆய்விற்காக தேன்கனிக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குடிக்க பணம் கொடுக்க மறுத்த அண்ணனை ஆத்திரமடைந்த தம்பி கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.