தமிழ்நாடு

தேனீக்கள் தாக்கியதால் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு 

தேனீக்கள் தாக்கியதால் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு 

webteam

தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற முதியவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

போச்சம்பள்ளி அடுத்த முருகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (60). விவசாய கூலியான இவர் விவசாய நிலங்களில் உள்ள தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி துடைப்பங்குச்சி தயாரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று மதியம் விவசாய நிலத்திற்கு சென்று, தென்னை ஓலைகளை வாங்க பார்வையிட்டார். 

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த மலைத் தேனீக்கள் திடீரென முருகனை தாக்கியுள்ளது. நிலைத்தடுமாறிய முருகன் ஓடியுள்ளார். அப்போதும் தேனீக்கள் தொடர்ந்து கொட்டியுள்ளது. பல நூறு தேனிக்கள் முகம் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் கொட்டிய நிலையில், தேனீக்களின் கடியிலிருந்து தப்பிக்க அருகே மோகன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தண்ணீர் சேமிப்பு தொட்டியில் குதித்துள்ளார்.

அதற்குள்ளாக உடம்பில் விஷம் ஏறிய நிலையில் மயக்கமடைந்து முருகன் தண்ணீர் தொட்டியிலேயே உழிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இவர் இறந்து கிடப்பதை கண்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

முருகன் ஒருவரின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்த நிலையில், தற்போது அவரும் இல்லாததால் வருமையின் உச்ச நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தேனீக்களின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்த போன குடும்பத்தாருக்கு அரசு இழப்பீடு வழங்கி உதவு செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.