Nagaraj pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: உணவகத்திற்குள் புகுந்து தாக்கியதாக திமுக பிரமுகர் மீது காவல் நிலையத்தில் புகார்

கிருஷ்ணகிரி அருகே உணவகத்திற்குள் நுழைந்து ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக திமுக மாவட்ட பிரதிநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

webteam

கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டினம் புறவழிச் சாலையில் உணவகம் நடத்தி வருபவர் கபிலன் இவர், காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Restaurant

அந்த மனுவில், “எனது கடைக்கு அருகாமையில் திமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜ் என்பவர் வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருகிறார். நாகராஜ் எனது கடைக்குள் நுழைந்து எனது சட்டையைப் பிடித்து இழுத்து மார்பில் தாக்கியதோடு ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இந்த பகுதியில் நான் மட்டும்தான் கடை வைக்க வேண்டும், வேறு யாரும் கடை வைக்கக் கூடாது, உனது கடையை நீ மூட வேண்டும், என என்னை மிரட்டினார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கடுமையாக தாக்கினார்.

இதனால் நான் காயமடைந்து காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை தாக்கிய நாகராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக மாவட்ட பிரதி நாகராஜ் கபிலன் உணவகத்திற்குள் நுழைந்து அவரை ஆபாச வார்த்தையில் பேசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.