பெண் காட்டு யானை உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | உடல் நலம் குன்றிய 7 வயது பெண் காட்டு யானை உயிரிழப்பு

அஞ்செட்டி அருகே 7 வயது பெண் யானை உயிரிழப்பு. பிரேத பரிசோதனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில 50-க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள யானைகள் அஞ்செட்டி வனத்திலிருந்து ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்கு உணவு, தண்ணீர் தேடிச் சென்று வருகிறது. வறட்சியின் போது, உணவு, தண்ணீரியின்றி வனத்தில் உள்ள விஷக்காய்களை தின்றும், யானைகளுக்கிடையே நடைபெறும் மோதலின் காரணமாகவும் உயிரிழக்கிறது.

மேலும் வனத்தை விட்டு கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும் ஓசூர் வனக்கோட்டத்தில் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் அஞ்செட்டி வனச்சரகம் குந்துக்கோட்டை அருகே பனைக்காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது, சுமார் 7 வயது பெண் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது.

இதனையடுத்து கால்நடை மருத்துவர் யானையை பிரேத பரிசோதனை செய்த பின்னர். அப்பகுதிலியே அடக்கம் செய்தனர். யானை உயிரிழந்தது குறித்து முதற்கட்ட விசாரணையில் உடல் நலம் குன்றி யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் யானைகள் உடல் நலம் குன்றி இருந்தால் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,