புகையிலை பொருட்கள் பறிமுதல் pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை – 2.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா கஞ்சா போன்ற பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் ஆந்திர மாநில எல்லையான காரக்குப்பம் கனரா வங்கி முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டவுடன் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், லாரியை சோதனை செய்தனர். அப்போது பாக்கு மட்டைக்குள் மறைத்து வைத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.