தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: அடையாளம் தெரியாத லாரி மோதியதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: அடையாளம் தெரியாத லாரி மோதியதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

kaleelrahman

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு ராணுவ வீரர்கள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த். இவர்களில், கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பிரசாந்த் ஹைதராபத்தில் இராணுவ பயிற்சியில் உள்ளார்.

இராணுவ வீரர்களான இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ள நிலையில் இன்று கோவிந்தராஜ் மட்டும் விடுப்பு முடிந்து பெங்களூருவுக்கு பணிக்கு செல்வதாக இருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று பாறைக்கொட்டாய் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்தனர்.


அப்போது, சின்னமுத்தூர் என்ற பகுதி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத லாரி இவர்கள் மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த கோவிந்தராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவிந்தராஜ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளம் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.