தமிழ்நாடு

1 மணி நேரமாக வராத 108 ஆம்புலன்ஸ்-டாட்டா ஏஸ்ஸில் மருத்துவமனைக்கு சென்ற அவலம்

webteam

கிருஷ்ணகிரி சிப்காட் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் அருகே உள்ள அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இதில் பேரிகை பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகள்கள் பிரியா, ஹாசின் ஆகிய நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் பலத்த காயத்துடன் வலியால் துடித்துள்ளனர். இதில் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ்கள் எதுவும் வராததால் அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் படுகாயம் அடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மற்றொரு பைக்கில் வந்து அடிபட்ட ஓலைப்பட்டியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒரே விபத்தில் மூன்று இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்ப்ள்ளி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.