தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீர் இடையிலேயே திருடப்படுவது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதை அடுத்து, காளஹஸ்தியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மதகுகள் மூடப்பட்டன. இதையடுத்து, தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு 300 கன அடியில் இருந்து 442 கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டாலும், காளஹஸ்தியில் ஆந்திர விவசாயிகள் அனுமதியின்றி தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அதனால், தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்பதை ஆதாரத்துடன் புதியதலைமுறை செய்தி வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள், காளஹஸ்தியில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த 2 மதகுகளை மூடியுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர் அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் திருடப்படாமல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.