கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையின் பிரதான மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மதகில் ஏற்பட்ட உடைப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை 52 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.பி. அணையில் காலையில் 51 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையின் பிரதான மதகு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதகு பகுதியில் உள்ள இரும்பு துருபிடித்ததே உடைப்பு ஏற்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. உடனடியாக மதகை சரி செய்யவது சாத்திமில்லை எனவும், அணையிலிருக்கும் தண்ணீர் வெளியேறிய பின்னரே மதகை சரி செய்ய முடியும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே.ஆர்.பி. அணையின் உடைப்பு ஏற்பட்ட மதகு கடந்த ஆண்டு ஒரு கோடி செலவில் இந்த புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கே.ஆர்.பி. அணையை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் பொது பேசிய அமைச்சர், இரண்டு நாட்களில் மதகு சரிசெய்யப்படும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இயற்கையான நீர் இல்லாமல் ரசாயனம் கலந்த தண்ணீரும் வருவதால் இரும்பு துருப்பிடித்து இருக்கலாம் என தெரிகிறது. இதனை தற்போது பொதுபணித்துறையினரும், வல்லுநர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மதகுகளில் பாதிப்பு ஏற்பட்டால் அவை அனைத்தும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.