kp.munusamy
kp.munusamy pt desk
தமிழ்நாடு

“எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார்” - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

webteam

அதிமுக பொன் விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ops, ttv dhinakaran

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேசியவற்றின் விவரம், இங்கே...

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ:

“அதிமுக என்ற இயக்கத்தை அழிக்க யாரும் பிறக்கவில்லை. அது துரோகியாக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி. துரோகிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை

எப்போதும் இங்கு விபத்தில் (Accidental எனும் தொனியில்) தான் திமுக ஆட்சிக்கு வரும். அப்படி விபத்திலே தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்திருக்கிறார். அப்படித்தான் ஸ்டாலினின் ஆட்சியும் விபத்தில் வந்திருக்கிறது”

முன்னாள் அமைச்சர் வேலுமணி

“கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்துள்ளார் ஓ.பி.எஸ். இது மிகப்பெரும் துரோகம். அதிமுகவுக்கு எதிரி திமுக தான், கருணாநிதி, முக.ஸ்டாலின் தான். அவர்களை சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசுகிறார் ஒபிஎஸ்”

முன்னாள் அமைச்சர் தங்கமணி

“கோடநாடு சம்பவம் நடந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை கைது செய்தார். எடப்பாடி மீது ஏதாவது வழக்கை போட வேண்டும் என்பதற்காகவே கோடநாடு கொலை வழக்கை கையில் எடுத்துள்ளார் பன்னீர் செல்வம்”

eps

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:

“தன் சுயநலத்திற்காக தேனி மாவட்ட அதிமுகவை வலுவிழக்கச் செய்ய முயற்சித்தார் ஓ.பி.எஸ். அதனை அறிந்த ஜெயலலிதாவால் பலமுறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு எச்சரிக்கப்பட்டவர் தான் ஓபிஎஸ்”

முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி

“எம்.ஜி.ஆர் உடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ளாமல், ஜானகியை முதலமைச்சர் ஆக்கினார். அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு, அவரை மன்னித்து மூத்தவர் என்று ஆர்.எம்.வீரப்பனை கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கினார்.

ஆர்.எம்.வீரப்பன்

ஆனால், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினிகாந்த்-க்கு ஆதரவாக பேசியதால், அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நீக்கினார். அப்பேர்ப்பட்டவரை ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்கு அழைக்கிறார். அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த நிலை தான் தற்போது ஓ.பி.எஸ்-க்கும்.

தனது முதல்வர் பதவி பறிபோன பிறகு தான் அம்மா ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறினார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை வெளியேற்ற வேண்டுமென்று கூறியவர் தான் ஓபிஎஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்பு அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறி வந்தார்.

jayalalithaa

ஆனால், அவரால் அது கடைசி வரையில் முடியவில்லை. கட்சி பிளவுபடக் கூடாது என்று தான் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது துணை முதல்வர், நிதித்துறை, வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் என உயரிய பதவிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்வி வந்த போது தான் முதல்வராக வேண்டும் என ஒருபோதும் எடப்பாடி நினைக்கவில்லை. ஓபிஎஸ்-ஸிடம் கேட்டோம். ‘அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என கூறினார். வேண்டுமென்றால் நேருக்கு நேர் விவாதம் செய்து கொள்ளலாம். இந்த பக்கம் ஓபிஎஸ் இருக்கட்டும், மறுபக்கம் நானும் இருக்கிறேன்.

OPS EPS

நரேந்திர மோடி டீ விற்றவர் என்று அவரே சொன்ன பிறகு தான், தன்னையும் ஒரு டீக்கடைக்காரர் என்றும், டீ கடையில் டீ ஆற்றியவன் என்றும் பிரதமரோடு தன்னை ஒப்பிடுகின்றார். ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதற்காக தான் இந்த மாநாடு. பகவத்கீதை கூற்றுப்படி துரோகியான ஓ.பி.எஸ் அழிக்கப்பட வேண்டும். எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓபிஎஸ் ஆக இருந்தாலும், டிடிவியாக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள்” என்றார்.