கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தையில் சிறுகடைகள் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாளைக்கு 50 சதவீதம் கடைகள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் 1800 சிறுகடைகள் உள்ளன. இதில் ஒருநாளைக்கு 900 கடைகள் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மார்க்கெட் வளாகத்திற்குள் வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுகடைகள் அனைத்தும் ஒற்றை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட கடைகள் ஒருநாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கடைகள் அடுத்தநாளும் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 5 மணியிலிருந்து நண்பகல் 11 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படும் எனவும், எனவே அதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருமிநாசினி தெளித்து மார்க்கெட்டை சுத்தம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அனைத்துக் கடைகளும் ஒரேநாளில் இயங்கவேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.