கொரோனா ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பின் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் தற்பொழுது இயக்கப்பட்டாலும் சென்னை கொருக்குப்பேட்டை பகுதிக்கு மட்டும் அரசு பேருந்து சேவை ஒரு கனவாகவே ஆகிவிட்டது.
ஒரு பக்கம் கொருக்குப்பேட்டை ரயில்வேகேட், இன்னொரு பக்கம் நேதாஜி நகர் ரயில்வே கேட், மூன்றாவது பக்கம் எழில் நகர் ரயில்வேகேட் என மூன்று பக்கமும் ரயில்வே கேட்களுடன் கிட்டத்தட்ட தீவு போல காட்சியளிக்கிறது கொருக்குப்பேட்டை. இரண்டரை லட்சம் வாக்காளர்களையும், மூலக்கொத்தளம் தொடங்கி ஐ.ஓ.சி வரை 6 கிலோமீட்டர் வரையும் கொண்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலைக்கு ஏன் ஒரு பேருந்து கூட வருவதில்லை என்பதே அம் மக்களின் கேள்வி. ஊரடங்குக்கு முன்னர் அங்கு வழக்கமாக வந்து கொண்டிருந்த 44C, 159A ஆகிய பேருந்துகள்கூட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வருவதில்லை என்கிறார்கள்.
தினக் கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இந்தப்பகுதிக்கு பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நம்பியே இருக்கிறார்கள் மக்கள். இதனால், வருமானத்தின் பெரும்பகுதி போக்குவரத்துக்கே செலவாகிவிடுவதாக கூறுகிறார்கள்.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, யானைக்கவுனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பால பணி நிறைவடைந்தவுடன், கொருக்குப்பேட்டைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதுவரை மாற்று வழிகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.