தமிழ்நாடு

கொல்லிமலை: முதல்முறையாக நீட் தேர்வெழுதி மருத்துவம் படிப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவர்.!

webteam

கொல்லிமலை பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவர் அரசு பள்ளியில் படித்து முதல் முறையாக நீட் தேர்வெழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 14 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் நாட்டைச் சேர்ந்த முத்துசாமி தங்கமணி தம்பதியினரின் மகன் வெற்றிமுருகன் கொல்லிமலை மாதிரி அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி 7.5% இட ஒதுக்கீட்டில் பழங்குடியினர் பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

கடந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின்பேரில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்து இவ்வாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பழங்குடியின பிரிவில் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதுவரை கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற எவர் ஒருவரும் மருத்துவ படிப்பில் சேராத நிலையில் வெற்றிமுருகன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கொல்லிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து எவர் ஒருவரும் மருத்துவர் ஆகாத நிலையில், அந்தச் சாதனையை தற்போது வெற்றிமுருகன் அடைந்திருப்பது பெருமை அளிப்பதாக அவரது பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். தன்னம்பிக்கையுடன் படித்ததால் தற்போது மருத்துவர் ஆகும் கனவு நினைவாகி இருப்பதாகவும், மருத்துவராகி தங்கள் பகுதி மக்களுக்கு சேவை ஆற்றுவதே தனது விருப்பம் என வெற்றிமுருகன் கூறியுள்ளார்.