கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்படாததால், திருச்சி கொள்ளிடம் பகுதியில் உள்ள பிரதான குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் நிமிடத்திற்கு 6,000 லிட்டராக இருந்த நீர்வாங்கல், ஜூலை இறுதியில் 2,000 லிட்டராக சரிந்தது. இந்த நிலை தொடர்ந்தால், திருச்சி மாநகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது காவிரி ஆறு. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வறட்சி நிலை காணப்படுகிறது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பிரதான குடிநீர் கிணறுகள் மூலம், மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணறுகளில் இருந்து அதிக திறன் கொண்ட மின்மோட்டார்கள் மூலம் நிமிடத்திற்கு 14000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில காலமாக நிலவி வரும் வறட்சி காரணமாக, இந்த கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
காவிரியில் நீர்வரத்து குறைந்ததால், கடந்த ஜூன் முதல் வாரத்தில் கொள்ளிடம் ஆற்றின் பிரதான கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் அளவு நிமிடத்திற்கு சுமார் 6,000 லிட்டராக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜூலை இறுதியில் நீரின் அளவு மேலும் குறைந்து நிமிடத்திற்கு சுமார் 2,000 லிட்டர் அளவுக்கு சரிந்ததாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கொள்ளிடம் ஆற்றின் குடிநீர் ஆதார கிணறுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, திருச்சி மாநகரின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ஒருகாலத்தில் ஆண்டு முழுவதும் நீருடன் காணப்பட்ட காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் தற்போது வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், நிலத்தடி நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவிரி நீர்ப்பங்கீடு விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் கிடைக்காவிட்டால், திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மற்றும் அதைச் சார்ந்த பிரதான மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர