கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினை வீழ்த்தி, திமுக வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு, தற்போது 75 வயதில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கவனிக்கும்படியான வெற்றி, தோல்வி என்றால் அது கொளத்தூர் தொகுதியின் வெற்றி தோல்வி தான். முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய சொந்த தொகுதியிலேயே தவெகவின் விஎஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். தேர்தலில் 40.51% சதவீத வாக்குகளை முக ஸ்டாலின் பெற்ற நிலையில், கூடுதலாக 8795 வாக்குகளை பெற்ற விஎஸ் பாபு 45.31 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்று திமுக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தோல்விக்கு வழிவகுத்தார். திமுகவின் 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதல்வராக இருந்து அடுத்த தேர்தலில் தோற்ற தலைவராக முக ஸ்டாலின் பெயர் எழுதப்பட்டது.
இதில் கவனிக்கப்படும் மற்றொரு விசயம் என்னவென்றால், முன்பு திமுகவின் அங்கமாக இருந்த விஎஸ் பாபு, முக ஸ்டாலினின் தேர்தல் வெற்றிக்கு முன்னின்று பணியாற்றிவர் என்பதும், தற்போது அவரிடமே தோற்றிருப்பதும் அப்போதைய சூழலில் பேசுபொருளாக இருந்தது. இப்படி முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எதிராக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படும் ஒருவராக தவெகவின் கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு மாறினார்.
இந்நிலையில் தான் 75 வயதாகும் விஎஸ் பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் விஎஸ் பாபுவுக்கு, அவசர பிரிவில் சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், அவருடைய உடல்நலன் சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தசூழலில் விஎஸ் பாபு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், தவெகவினரும் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.