சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தீவிபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளர் ஆனந்த் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 15-ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கான முயற்சி நடைபெற்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததால் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் என்பவரும் நேற்று அபிமன்யூ என்பவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று காலை கடை உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, தீவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.