திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட கொடியேற்ற விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி்ப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, வெளிநாட்டு பக்தர்களும் வந்து தரிசனம் செய்கின்றனர். சமயபுரம் மாரியம்மனே பக்தர்களுக்காக, 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இன்று நடந்த கொடியேற்றத்துக்கு முன் அம்மனுக்கு பால், இளநீர், நைவேந்தியம்,பழம் போன்றவை மூலம் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மன் கோயிலைச் சுற்றி வலம் வந்து கொடி மரத்தில் வந்து இறங்கியது. யாகம் நடத்தி அம்மன் படம் பொறித்த கொடியை, கொடி மரத்தில் குருக்கள் ஏற்றினார். இந்த விழாவில் கோயில் இணை ஆணையர் க.தென்னரசு, கோயில் மணியக்காரர் ரமணி, புலவர் ஜெகநாதன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை முதல் 17-ம் தேதி வரை தினசரி காலை அம்மன் பல்லக்கில் புறப்பட்டு வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.31 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.
இந்த விழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.