தமிழ்நாடு

கோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்

கோதண்டராமர் சிலைக்கு‘கோவிந்தா கோவிந்தா’போட்டு வழியனுப்பிய மக்கள்

webteam

போச்சம்பள்ளி‌யை அடுத்த, கெரிகேப்பள்ளி ரயில்வே பாலத்தைக் கடந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலையை 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷத்துடன் மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலை செய்ய 350 டன் எடை கொண்ட பாறை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட இந்தப் பாறையில் முகம் மட்டும் வடிவமைக்கப்பட்டு கடந்த மாதம் ‌ஏழாம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. ‌

‌‌இதற்கி‌‌‌டையில் ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாமல் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் இன்ஜின் உதவியுடன் நேற்று முன் தினம் விஷ்வரூப கோதண்டராமர் சிலை பாம்பாறு தரைப் பாலத்தை கடந்தது.

ஊத்தங்கரை வழியாக மத்தூர் வந்தடைய வேண்டிய ‌கோதண்டராமர், சாமல்பட்டி ரயில்வே பாலத்தில் போதிய அகலம் இல்லாத காரணத்தால் கடக்க முடியாது போனது. இதனால்‌ மாற்றுப்பாதையான கெரிகேபள்ளி, புலியூர், போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக கிருஷ்ணகிரியை வந்தடைய வேண்டும்.

இந்நிலையில் இன்று கெரிகேபள்ளி ரயில்வே பாலத்தின் அடியில் லாரி கடந்து வந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாலத்தில் குவிந்திருந்து சிலை வந்ததும் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் வழிபட்டனர். மேலும் தங்களது கைப்பேசியில் படமெடுத்து மகிழ்ந்தனர். சிலையானது இன்று மாலை போச்சம்பள்ளி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.