தமிழ்நாடு

கோடநாடு வீடியோ விவகாரம் : சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்

கோடநாடு வீடியோ விவகாரம் : சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்

webteam

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். பின்னர் நள்ளிரவு 11.30 மணியளவில், மாஜிஸ்திரேட் சரிதா இல்லத்தில், சயான், மனோஜ் ஆகியோரை காவல்துறையினர் மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை சிறையில் அடைக்க மறுத்துவிட்ட நீதிபதி, நிபந்தனைகளின் அடிப்படையில் இருவரையும் விடுத்தார். அத்துடன் 18ஆம் தேதியான இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் உத்தரவிட்டார். 

அதன்படி, இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரினார். ஜாமீன் வழங்க வேண்டுமென்றால் மாலை ஐந்தே முக்கால் மணிக்குள் ஜாமீன் உத்தரவாதம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இருவர் தரப்பிலும் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க இரண்டு நாள் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். மேலும் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவும் உத்தரவிட்டார். 

இந்நிலையில் ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் இரண்டையும் நீதிமன்றத்தில் சமர்பித்ததால், இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் பிணைத்தொகைக்கு தேவைப்படும் சில ஆவணங்களை திங்களன்று தாக்கல் செய்யவும் ஆணையிட்டார்.