தமிழ்நாடு

கொடநாடு கொலை: நடந்தது என்ன? நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம்

கொடநாடு கொலை: நடந்தது என்ன? நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம்

webteam

கொடநாடு‌ பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததாகவும், அதனை கொள்ளையடிக்கும் முயற்சியிலேயே காவலாளி கொல்லப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. அன்றைய தினம் கோடநாடு பங்களாவில் நடந்தது என்ன என்பது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா விளக்கம் அளித்துள்‌ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கும் திட்டத்தில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர், இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் கார் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜும் ஒருவர். சயான் என்பவர் கோவையைச் சேர்ந்தவர், மற்ற 9 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பங்களாவில் பெரிய அளவில் பணம் இருப்பதாகவும், சி.சி.டி.வி. மற்றும் நாய்கள் இல்லை என்று தெரிவித்தும், கொள்ளை சம்பவத்தில் மற்றவர்களை கனகராஜ் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த 23 ஆம் தேதி இரவு 12 மணியளவில், போலி எண்கள் பொறுத்தப்பட்ட மூன்று கார்களை பயன்படுத்திய அவர்கள், 8-வது கேட்டில் இருந்த காவலாளி கிருஷ்ணா தாபாவை அடித்து, அங்கிருந்த லாரியில் கட்டிவைத்துள்ளனர்.

அதன்பிறகு, கேட் எண் 10-ல் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய அறைகள் உள்பட 3 அறைக்குள் நுழைந்துள்ளனர். பணம் ஏதும் இல்லாத நிலையில், 5 வாட்சுகள், அலங்காரப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு கூடலூரை நோக்கி 6 பேர் காரிலும், கனகராஜ், சயான் ஆகியோர் மற்றொரு காரில் கோவைக்கும், மற்றவர்கள் பேருந்துகளிலும் தப்பித்துள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். கனகராஜ் விபத்தில் உயிரிழந்துவிட்டார், மற்றொரு விபத்தில் சயான் படுகாயமடைந்துள்ளார். இருவரது சம்பவமும் விபத்துதான் என்றும், அதில் சந்தேகம் இல்லை என்றும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.