தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று மீண்டும் விசாரணை

kaleelrahman

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் 2-வது முறையாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் உதகை காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இந்த வழக்கு சம்மந்தமாக விசாரித்து வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அரசுத்தரப்பு சாட்சியங்கள் என 220 பேருக்கு மேல் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கூடுதலாக தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முதல் நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சயானிடம் மீண்டும் 2 வது முறையாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் நேற்று சுமார் 4 மணி நேரம் சயானிடம் விசாரணை நடைபெற்றது.

இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், சயானிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.