தமிழ்நாடு

மனோஜ், சயானை பிப். 25 வரை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் மனோஜ் மற்றும் சயானை பிப்ரவரி 25ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி சென்ற மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மறுத்த நீதிமன்றம், ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்துடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் இருவரும் நேரில் ஆஜராக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவர்களுக்கு தரப்பட்டிருந்த ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் சயான் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்பட்ட மனோஜ், சயான் ஆகியோரை பிப்ரவரி 25ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என கோத்தகிரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் கோத்தகிரி காவல் நிலையத்தினர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.