இரு கிராமங்களை இணைக்கும் சாலை இன்னமும் பொதுமக்கள் தேவைக்காக திறக்கப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலையும், தேனி மாவட்டத்தின் பெரியகுளம் நகரையும் இணைக்கும் வகையில், அடுக்கம் என்ற கிராமம் வழியாக புதிதாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அடுக்கடுக்கான மலைத்தொடர்களைக் கொண்ட, இந்த பகுதிகளில், சிறு குறு ஓடைகளும் அருவிகளும் ஏராளமாக உள்ளன. இதனால் அமைக்கப்பட்ட சாலையின் குறுக்கே, மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் கடக்கும் பொழுது, அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது.
சாலை அமைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளைக் கடந்தும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு, அதிகாரப்பூர்வமாக இந்த சாலை திறக்கப்படவில்லை. அடுக்கம் கிராம மக்களும், தேனி மாவட்டத்தின் பெரியகுளம் கிராம மக்களும், தோட்டங்களுக்கு வந்து செல்வதற்காக மட்டும், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இச்சாலையில், சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர். மழை காலங்களில் பயணிகள் இந்த சாலையில் பயணிக்க அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.